1814. | மாந்தர்தம் மொய்ம்பினின், மகளிர் கொங்கை ஆம் ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின, சாந்தம்; அம் மகிழ்நர்தம் முடியின், தையலார் கூந்தலும் வறுமையை மலரின் கூலமே.* |
மாந்தர்தம் மொய்ம்பினின் - ஆடவர்களது வலிய தோளில்; சாந்தம் -பூசப்பெற்ற சந்தனத்தை; மகளிர் கொங்கை ஆம் ஏந்து இளநீர்களும் - பெண்களது தனங்களாகிய உயர்ந்துள்ள இளநீர்களும்; வறுமை எய்தின - இல்லாமை அடைந்தன; அம் மகிழ்நர்தம் முடியின்- அவ் ஆடவர்களது முடியில் உள்ள; மலரின்கூலம் -பூக்களின் திரட்சியை; தையலார் கூந்தலும் - மகளிரது கூந்தலும்; வறுமைய -இல்லாமை அடைந்தன. ஆடவர் தோளில் பூசப்பெற்ற சந்தனம் மகளிர் கொங்கையைச் சென்றடையும். இங்கே ஆடவர்சந்தனம் பூசாமையாலும் மகளிரைத் தழுவாமையாலும் மகளிர் கொங்கை சந்தனம் பெறாது வறுமை எய்தினவாம். ஆடவர்தம் தலைமுடியில் உள்ள மலர், கூட்டத்தால் மகளிர் கூந்தலைச் சென்றடையும். இங்கே ஆடவர் மலர் சூடாமையாலும், மகளிரைக் கூடாமையாலும் மகளிர் கூந்தல்மலர் வறுமை அடைந்தனவாம். ‘ஏ’ ஈற்றசை. 209 |