1816.‘திக்கு நோக்கிய தீவினைப்
     பயன்’ எனச் சிந்தை
நெக்கு நோக்குவோர், ‘நல்வினைப்
     பயன்’ என நேர்வோர்,
பக்கம் நோக்கல் என்?
     பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும்,
     அருந் துயர் உழந்தார்.

     பருவரல் இன்பம் என்று இரண்டும் - துன்பம்,  இன்பம் என்ற
இரண்டையும்; ஒக்க நோக்கிய யோகரும் - சமமாகப் பார்க்கின்ற ஞான
யோகிகளும்; அருந்துயர்உழந்தார் - அரிய துன்பத்தில் வருந்தினார்
(என்றால்); ‘திக்கு நோக்கிய தீவினைப்பயன்’ எனச் சிந்தை நெக்கு
நோக்குவோர் -
தம் இடத்தை நோக்கி வந்த தீவினையின்பயன் இது
என்று மனம் உடைந்து துன்புற்றுப் பார்ப்பவர்; ‘நல்வினைப் பயன்’ என
நேர்வோர் -
இது நல்வினையால் விளைந்த பயனாகும் என்று உடன்பட்டு
மகிழ்வோராகிய; பக்கம் நோக்கல் என் உலக மக்களிடத்து - ஆராய்ந்து
கூற என்ன உள்ளது?

     தீவினையில் துவண்டு நல்வினையில் மகிழும் உலகினர் பற்றிச்
சொல்ல என்ன உள்ளது?என்றார். ஏனெனின் சமநிலை உடைய ஞானிகளே
துயர் வடித்தனர் ஆகலின். 1762, 1763 ஆம்பாடல்களில் வசிட்டன் உணர்வு
குறித்தமை இங்கு ஒப்பிட்டுணரத் தக்கது.                           211