கலிவிருத்தம்  

1821.‘பொன்னை உற்ற
     பொலங் கழலோய்! புகழ் -
மன்னை உற்றது உண்டோ,
     மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு’
     என்று இயம்பினாள் -
மின்னை உற்ற
     நடுக்கத்து மேனியாள்.

     மின்னை உற்ற  நடுக்கத்து  மேனியாள் - மின்னலை ஒத்த
நடுங்குகின்ற  உடம்பினைஉடையளாகிய சீதை;  ‘பொன்னை உற்ற
பொலங்கழலோய்! -
பொன்னால் செய்த பொலிவானவீரக்கழலை
அணிந்தவனே;  புகழ் மன்னை - கீர்த்தி உடைய  சக்கரவர்த்தியை;
உற்றது உண்டோ? - நேரிட்ட  துன்பம் ஏதேனும் உளதோ;  மற்று -
அப்படிஇல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை - இக் கொடிய
துன்பம் வந்தது எதனால்; இயம்பு - சொல்லுக;' என்று இயம்பினாள் -
என்று  கேட்டாள்.

     மாமியார் அழுதபடியால் சக்கரவர்த்திக்கு  ஏதேனும்  தீங்கண்டோ
என்று வினாவினாள்.மற்று,  வினைமாற்று.                         216