சீதையின் துயர் 1823. | நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும், மேய மண் இழந்தான் என்றும், விம்மலள்; ‘நீ வருந்தலை; நீங்கவென் யான்’ என்ற தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். |
(அது கேட்ட சீதை) நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்- தன் கணவன் இராமன்காடு செல்லப்போகிறான் என்றும்; மேய மண் இழந்தான் என்றும் - தனக்குரிமையாகப்பொருந்திய இராச்சியத்தை இழந்துவிட்டான் என்றும் (கருதி); விம்மலள் -வருந்தினாள் அல்லள்; ‘யான் நீங்குவென், நீ வருந்தலை’ என்ற தீய வெஞ்சொல் -யான் காடு செல்வேன் நீ வருத்தமுறாதே என்று சொல்லிய மிகக் கொடிய சொல்; செவி சுடத்தேம்புவாள் - தன் காதுகளைச் சுட்டெரிக்க அதனால் வாடுவாள் ஆனாள். அவன் இழப்புக்கு வருந்தாமல், அவனைத் தான் பிரியும் பிரிவுக்கும், அதனால் வருந்தாதேஎன்று சொல்லிய சொல்லுக்குமே வருந்தினாள் என்பதாம். எந்நிலையிலும் அவனைப் பிரியாமையேஅவள் கருத்தாம். தன்னைப் பிரிவதில் அவன் கவலை உறவில்லையே என்பதும் அவள் ஏக்கமாகும். 218 |