இராமன் சீதை உரையாடல் 1832. | ‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும், வெல்லும் வெண் நகையாய்! விளைவு உன்னுவாய் - அல்லை; போத அமைந்தனை ஆதலின், எல்லை அற்ற இடர் தருவாய்’ என்றான். |
‘முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் - முல்லை அரும்பும், கடலில் விளைந்தமுத்தும் போட்டியிட்டாலும்; வெல்லும் வெண்நகையாய்!- அவற்றை வெல்லுகின்ற வெள்ளியபற்களை உடையவளே; விளைவு உன்னுவாய் அல்லை - (உடன் வருதலால்) உண்டாகக் கூடியதீமையைக் கருதுகின்றாயில்லை; போத அமைந்தனை - உடன் வருதற்குச் சித்தமாய்விட்டாய்; ஆதலின் -; எல்லை அற்ற - அளவற்ற; இடர் தருவாய்’ - துன்பங்களை உண்டாக்குவாய்;’ என்றான் -. எதிரது நோக்கிக் கூறியது. உன் கால்கள் மென்மையானவை என்று கூறிமுன் மறுத்தவன்இப்போது ‘நீ காட்டிற்கு வருதலால் கணக்கற்ற தீங்கு விளையும்’ என்று கூறி மறுக்கலானான்.பெண்டிர் உடன்வரின் அவர்களைக் காத்தல் முதலிய முயற்சிகளில் பல தீமைகளைச் சந்திக்க நேரும் என்பது இராமன் கணிப்பு. 227 |