இராமன் புறப்பாடு 1834. | பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்; மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும் செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் - நெறி பெறாமை அரிதினின் நீங்குவான்.1 |
பெருந்தகை - இராமன்; பிறிது ஓர் மாற்றம் பேசலன் - வேறு ஒருவார்த்தையும் பேசாதவனாய்; மைந்தரும் மாதரும் மறுகி வீழ்ந்து அழ - ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால்; (அவர் கண்ணீரால் சேறாகி) செறுவின் வீழ்ந்த- வயல் போலக் கிடக்கின்ற; நெடுந் தெரு - பெரிய தெருவின்கண்; நெறிபெறாமை - வழி கிடைக்கப் பெறாமையால்; அரிதினின் - சிரமப்பட்டு; நீங்குவான் சென்றனன் - நீங்கிச் சென்றான். அழுதலால் கண்ணீர் வெள்ளம் வீழ்ந்து தெரு சேறு ஆகியது. அதனால், வயல்போல உள்ளது. இனி ‘செரு’ என எதுகை நோக்கி இடையினம் வல்லினம் ஆனதாகக் கொண்டு’ போர்க்களம் போலமைந்தரும் மகளிரும் தாறுமாறாக வீழ்ந்து கிடக்கின்ற தெருவில் சிரமப்பட்டுக் கடந்து சென்றான் - என உரைத்தலும் ஒன்று. செறு - நெருக்கம் என்று பொருள் கூறி நெருக்கமாகவீழ்ந்த என்றும் ஆம். கூட்ட மிகுதியால் தெருவில் நடத்தல் அரிதாயிற்று. 229 |