மூவரும் போதல் 1835. | சீரை சுற்றித் திருமகள் பின் செல, மூரி விற் கை இளையவன் முன் செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? |
திருமகள் - சீதை; சீரை சுற்றி - மரவுரி அணிந்து; பின்செல - பின்னால் வர; மூரி விற்கை - வலிய வில் ஏந்திய கையை உடைய; இளையவன் -இலக்குவன் முன்னே செல்ல; காரை ஒத்தவன் - கார் மேக வண்ணனாய இராமன்; போம்படி - போகும் தன்மையை; கண்ட - பார்த்த; அவ் ஊரை - அந்தநகரத்தவரை; உற்றதை - அடைந்த துன்பத்தை; உணர்த்தவும் ஒன்ணுமோ? -எடுத்துக் கூறவும் இயலுமோ (இயலாது என்றபடி). சீதை முன்செல, இளையவன் பின்செல என்று ஒரு பாடமும் உண்டு. மனைவி முன்போகப் போதலேபெண்டிரைக் காத்துச் செல்வார்க் குரிய தாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர். 230 |