இராமன் தாயரை வணங்கி மன்னனை ஆற்றக் கூறல் 1837. | தாதை வாயில் குறுகினன் சார்தலும், கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா, ‘ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்’ என்றான்; மாதராரும் விழுந்து மயங்கினார். |
கோதை வில்லவன் - மாலை அணிந்த வில்லை உடைய இராமன்; தாதை -தந்தையது; வாயில் - மாளிகை வாயிலை; குறுகினன் சார்தலும்- அணுகிச்சேர்ந்தவுடன்; தாயரைக் கும்பிடா - உடன்வந்த தாய்மார்களை வணங்கி; ‘ஆதி மன்னனை - சக்கரவர்த்தியை; நீர் ஆற்றுமின் - நீங்கள் இங்கேயிருந்து தேற்றுங்கள்;’ என்றான் -; மாதராரும் - அம் மகளிரும்; விழுந்து மயங்கினார் -தரையில் விழுந்து மயங்கினார்கள். ‘ஆதி மன்னன்’ சக்கரவர்த்தி தயரதன் - மூத்த முதல் அரசன் ஆதலின். ‘ஆதி அரசன்’(1708) என்பது காண்க. தயரதனைக் காணாமலே கானகம்செல்வதாக வான்மீகம் சொல்லவில்லை; இதுகம்பர் மாற்றம். 232 |