நகர மாந்தர் தொடர இராமன் தேரில் சேறல் கலிவிருத்தம் 1840. | ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார்? மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத் தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர் ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால். |
ஏவியகுரிசில்பின் - (தந்தையால்) ஏவப்பெற்றுக் காடு செல்லும் இராமனைத்தொடர்ந்து; ஏகிலார் - உடன்செல்லாதவர்கள்; யாவர்? - எவர் (ஒருவரும் இல்லை); மா இயல் தானையின்- பெருமை பெற்ற சேனையை உடைய; மன்னை - தசரதனை; நீங்கலா - விட்டுப் பிரியாத; தேவியர் -தேவிமார்கள்; ஒழிந்தனர்- செல்லாது நீங்கினர்; தெய்வ மாநகர் ஓவியம் -அயோத்திநகர்ச்சித்திரங்கள்; உயிர் இலாமையால் - உயிர் இல்லாத காரணத்தால்; ஒழிந்தன- இராமனுடன் செல்லாமல் நகரத்தில் தங்கிவிட்டன; (மற்ற அனைவரும்சென்றனர்.) தேவிமாரும், ஒவியமும் தவிர மற்ற அனைவரும் இராமன் பின் சென்றனர் எனச் சுருங்கச்சொல்லி இராமன் உடன் சென்ற நகரமாந்தரை விளங்க வைத்தார். 1 |