1845. | பரந்து மீண் அரும்பிய பசலை வானகம், அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால், நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே. |
மீன் - நட்சத்திரங்கள்; பரந்து அரும்பிய - தோன்றி எங்கும் பரவியுள்ள; பசலை வானகம் - விளர்த்த ஆகாயம்; எங்கும் - எல்லாவிடத்தும்; அரந்தை இல் - துன்பம் இல்லாத; முனிவரன் அறைந்த சாபத்தால்- கோதமன் என்னும் முனிவன் கூறிய சாப மொழியால்; நிரந்தரம் - எப்பொழுதும்; இமைப்பு இலா நெடுங்கண் - இமைத்தல் இல்லாத பெரிய கண்கள்; ஈண்டிய -நெருங்கி அமைந்த; புரந்தரன் உரு என - இந்திரனது உடம்பைப் போல; பொலிந்தது- விளங்கியது. இந்திரன் சாபம் பெற்ற வரலாறு அகலிகைப் படலத்துக் கூறப் பெற்றது. வானம் இந்திரன்உடம்பு; விண்மீன்கள் இந்திரன் உடம்பில் உள்ள கண்கள் என உவமை காண்க. ‘ஏ’ஈற்றசை. 6 |