நகர மாந்தர் அங்கங்கே சோலையில் தங்கல் 1847. | வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய், நடு எள்தனை இடவும் ஒர் இடம் இலாவகை, புள் தகு சோலையின் புறத்துப் போர்த்தென விட்டது - குரிசிலை விடாத சேனையே. |
குரிசிலை விடாத சேனை - இராமனை விடாது அவனைப் பின் பற்றிச் சென்றசேனையானது; ஓர் ஓசனை வட்டம் வளைவிற்றாய் - ஓர் ஓசனை தூரம் உள்ள வட்ட வடிவாகக்சூழ்ந்து; நடு - இடையில்; எள்தனை இடவும் - எள்ளை இட வேண்டும் என்றாலும்; ஓர் இடம் இலாவகை - ஒரு சிறிதும் இடம் இல்லாதபடி; புள்தகுசோலையின் புறத்து - பறவைகள் தங்குதற்குத் தக்க சோலையின் புறத்து; போர்த்து என- மூடிக் கொண்டது போல; விட்டது - தங்கி அமைந்தது. இராமனைச் சூழ்ந்து வட்டமாக உடன் சென்றோர் இடைவெளி இன்றித் தங்கினர் என்பதாம்.எள்ளைக் கூறினார் துன்பத்தின்கண் நிகழ்வதாகலின். இராமன் பிரிவு, தசரதன் இறப்பு ஆகியனமுன்னும் பின்னும் உள்ள துக்க நிகழ்ச்சி ஆதலின் அவற்றின் தாக்கம் கவிஞனுக்கு எள்ளைக்கொண்டு வந்தது என்க. ‘புள் தகு - புள் தங்கு’ ‘தங்கு’ என்பது இடைக்குறை ‘தகு’ என்று நின்றது எனலும் ஆம். ‘எண் என்னும் சொல் ‘எள்’ என நின்றது. “வேற்றுமை அல்வழி எண் என் உணவுப்பெயர்” (தொல். எழுத்து . புள்ளி) ‘ஏ’ ஈற்றசை. 8 |