1848. | குயின்றன குலமணி நதியின் கூலத்தில், பயின்று உயர் வாலுகப் பரப்பில், பைம் புலில், வயின்தொறும் வயின்தொறும் வைகினர்; ஒன்றும் அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார். |
(இராமனுடன் சென்றஅவர்கள்) ஒன்றும் - ஒரு பொருளையும்; வாய்மடுத்து - வாயில் இட்டு; அயின்றிலர்- உண்ணவில்லை; துயின்றிலர்- தூங்கவில்லை; அழுது விம்மினார் -அழுது அழுது பொருமுகிறவர்களாய்; குலமணி குயின்றன நதியின் கூலத்தில்- கூட்டமான மணிகள்பதித்துள்ளன போல உள்ள ஆற்றுக் கரைகளில்; பயின்று உயர் வாலுகப் பரப்பில் - திரண்டுஉயர்ந்த வெண்மணற் பரப்பில்; பைம்புலில் - பசிய புல்தரையில்; வயின்தொறும்வயின் தொறும் - தங்குதற்குரிய இடங்கள் தோறும்; வைகினர்-தங்கினர். ‘குயின்று + அன’ செய்தால் ஒத்த என்று பொருள் காண்க. காட்டில் உள்ள ஆற்றில்மணிகள் பதித்துக் கரை ஒழுங்கு செய்வார் இலராகலின். ஆற்றில் அடித்துவரும் மணிக்கற்கள்கரையோரம் அங்கங்கே திரண்டு பதிந்த காட்சியைப் பதித்துச் செய்தது போல என்றார் . கூலம் - கரை. ஒன்றும் - இழிவு சிறப்பும்மை. ‘புல்லில்’ புலில் - குறை. 9 |