1850. பெரும் பகல் வருந்தினர்
பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி
மங்கையர் குறங்கில்.
அரும்பு அனைய கொங்கை, அயில்
அம்பு அனைய உண் கண்,
கரும்பு அனைய செங்சொல் நவில்,
கண்ணியர் துயின்றார்.

     பெரும் பகல் வருந்தினர் - பெரிய பகற் பொழுதில் வழிநடந்து
மிகவும் வருந்திய;தெங்கின் குரும்பைகள் பொரும் - தென்னங்
குரும்பைகளைத் தோல்வியுறச் செய்யும்;  பிறங்கு முலை - விளங்கிய
முலைகளை உடைய; செவிலி மங்கையர் குறங்கில் - தம்மைவளர்க்கும்
தாயரது துடையில்; அரும்பு அனைய கொங்கை - தாமரைமலர் அரும்பை
ஒத்தமுலையையும்; அயில் அம்பு அனைய உண்கள் - கூரிய அம்பை
ஒத்த மை உண்ட கண்ணையும் உடைய;  கரும்பு அனைய செஞ்சொல்
நவில் -
கரும்பைப் போலும் இன்ப செவ்வியசொற்களைப் பேசுகின்ற;
கன்னியர் - இள மகளிர்;  துயின்றார் - தூங்கினர்.

     செவில் மங்கையர் வயதின் மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை
போலும் முலை என்பதனால் அறிவுறுத்தி;  அவர் துடையில் துயிலும்
கன்னியர் இளவயதினர்  என்பதனை அரும்பைஒத்த முலை என்பதனாற்
கூறிய திறம் அறிந்து  மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம்
‘பூவெனப்படுவது  பொறி வாழ் பூவே’  (நால்வர் நான்மணி.  40) 
என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது  மலர் என்றவழி
இடம்நோக்கித் தாமரையேசொல்லப்படும்.                           11