இராமன் சுமந்திரனைத் தேருடன் ஊர் திரும்பக் கூறல் 1856. | ஏனையரும் இன்னணம் உறங்கினர்; உறங்கா மானவனும், மந்திரி சுமந்திரனை, ‘வா’ என்று, ‘ஊனம் இல் பெருங் குணம் ஒருங்கு உடைய உன்னால் மேல் நிகழ்வது உண்டு; அவ் உரை கேள்’ என விளம்பும்; |
ஏனையரும் - மற்றவர்களும்; இன்னணம் - இவ்வாறு; உறங்கினர்- துயின்றார்கள்; உறங்கா மானவனும் - தூங்காத பெருமை உடைய இராமனும்; மந்திரிசுமந்திரனை - அமைச்சனாகிய சுமந்திரனை; ‘வா’ என்று - வருக என அழைத்து; ’ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால் - குற்றம் அற்ற பெரிய நற்பண்புகள் ஒருசேரப் பெற்றுள்ள உன்னால்; மேல் நிகழ்வது உண்டு - இனிச் செய்ய இருப்பதாகிய செயல்உள்ளது; அவ் உரை கேள்’ - அந்தச் சொற்களைக் கேட்பாயாக; என விளம்பும் -என்று சொல்லுவான். தேர் ஓட்டுபவனாகவும் தசரதனுக்கு முதல் அமைச்சனாகவும் உள்ளவன் இச் சுமந்திரன்.சுமந்திரன் என்பது மந்திரத் தலைமையில் உள்ளார் அனைவரையும் பொதுவாகக் குறிக்கவும்வரும். 17 |