1868.‘நிறப் பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற,
மறப் பயன் விளைக்குறும் வன்மை அன்று அரோ;
இறப்பினும், திரு எலாம் இழப்ப எய்தினும்,
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.

     ‘சூரர்ஆவது - வீரத்திற் சிறந்த சூரர் என்று  ஒருவர் சொல்லப்
பெறுவது;  நிறப் பெரும் படைக்கலம் - ஒளிபடைத்த பெரிய ஆயுதம்;
நிறத்தின் நேர் உற -மார்பிடத்து  நேரே வந்து பொருந்த;  மறப்பயன்
வினைக்குறும் வன்மை அன்று -
வீரப்பயனை விளைத்துக் காட்டும்
வல்லமை அன்று;  இறப்பினும் - இறந்தாலும்; திருஎலாம்
இழப்ப
எய்தினும் -
செல்வம் எல்லாம் இழக்கும்படி நேர்ந்தாலும்;  அறம்
துறப்பிலர்-
அறத்தைக்கைவிடாதவர்; எனல்-எனச் சொல்லப் பெறுவதே
ஆகும்.’

      போரில் படைஏற்பது சூரத்தனம் அன்று. வாழ்வில் அறத்தின் வழி
மனம் தளராது நிற்றலே யாரும் என்றார்., ‘சிதைவிடத்து ஒல்கால் உரவோர்’
(குறள். 597.) காண்க. ‘அரோ’ , ‘ஏ’ அசைகள்.                       29