சுமந்திரன் இராமனிடம் விடைபெற்று இலக்குவனை வினாவல் 1880. | ஆறினன்போல் சிறிது அவலம், அவ் வழி, வேறு இலா அன்பினான், ‘விடை தந்தீக’ எனா ஏறு சேவகன் - தொழுது, இளைய மைந்தனை, ‘கூறுவது யாது?’ என, இனைய கூறினான்; |
வேறு இலா அன்பினான்- (சிறிதும்) வேறுபடாத அன்புடையவனாகிய சுமந்திரன்; அவ் வழி- அவ்விடத்து; அவலம் சிறிது ஆறினன் போல்- துயரம் சிறிது தெளிந்தவன் ஆகி; (இராமனிடம்), ‘விடை தந்தீக’ - விடை கொடுத்தருளுக; எனா -என்று சொல்லி (விடை பெற்று); ஏறு சேவகன் தொழுது - வீரனாகிய இராமனை வணங்கி; இளைய மைந்தனை - இலக்குவனை; ‘கூறுவது யாது - (அரண்மனை சென்று) சொல்ல வேண்டுவது என்ன;’ என - என்று கேட்க; இனைய - (பின் வருவனவற்றை) இத்தகையசொற்களை; கூறினான் - அவன் சொன்னான். இராமன், சீதை இருவர்பாலும் செய்தி அறிந்த சுமந்திரன் இலக்குவனையும் அதுபோல்வினாவினான். 41 |