நிலவொளி தோன்றல் அறுசீர் விருத்தம் 1887. | பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி, அன்னார் செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும், மை விளங்கியதே அன்ன வயங்கு, இருள் துரக்க, வானம் கைவிளக்கு எடுத்தது என்ன, வந்தது - கடவுள் திங்கள். |
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை - வஞ்சகத் தொழிலைச் செய்வதற்குஉதவியாயிருக்கும் வாழ்க்கை உடைய இராக்கதரை; பொருந்தி - நட்பாகச்சேர்ந்திருந்து; அன்னார் - அந்த அரக்கரின்; செய்வினைக்கு - செய்கின்ற(கொலை, களவு, கள், காமம், பொய் என்கின்ற) தீத் தொழிலுக்கு; உதவும் நட்பால் -உதவுகின்ற சிநேகத் தன்மையால்; செல்பவர் - அந்த அரக்கரை அழிக்கச் செல்லுகின்ற இராமலக்குவரை; தடுப்பது ஏய்க்கும் - செல்லாத படி தடுப்பதை ஒத்திருக்கின்ற; மைவிளக்கியதே அன்ன - அஞ்சனத்தை மேலும் விளக்கிக் கருமை ஆக்கியது போல் உள்ள; வயங்கு இருள் - விளக்கிய இருட்டை; துரக்க - ஓட்டிவிடுமாறு; வானம் -ஆகாயம்; கைவிளக்கு - சிறு விளக்கை; எடுத்தது என்ன - எடுத்து நிற்கிறது என்று சொல்லும்படி; கடவுள் திங்கள்- தெய்வத்தன்மை வாய்ந்த சந்திரன்; வந்தது- தோன்றியது அரக்கர் கருநிறம் உடையவர்; இருள் கருமையானது. அரக்கர் தீய தொழில் செய்பவர்; இருள் தீய தொழில்கள் நிகழ்வதற்குப் பொருந்தி உதவி செய்வது; இதனால் அரக்கர்க்கு நட்பாக இருக்கிற இருள் என்றார். அரக்கரை அழிக்கச் செல்கிற இராமலக்குவர்கள் வனத்தில் மேற்செல்லாதபடி அவ்விருள் தடுக்கிறது. அப்போது வானம் அவர்கள் செல்வதற்குதவியாகக் கைவிளக்கை எடுத்துக் காட்டுவது போல் நிலவொளி தோன்றியது என்று சந்திரோதயத்தைத் தற்குறிப்பேற்றம் செய்தார். ‘ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு, வீறுயர் மதியம் தோன்ற’ (சீவக. 1542) என்ற திருத்தக்க தேவர் வாக்கை இங்கு ஒப்பிடுக. 48 |