வசிட்டன் உரையாது அகலுதல் 1867. | ‘இல்லை’ என்று உரைக்லாற்றான் ஏங்கினன், முனிவன் நின்றான்; வல்லவன் முகமே, ‘நம்பி வந்திலன்’ என்னும் மாற்றம் சொல்லலும், அரசன் சோர்ந்தான்; துயர் உறு முனிவன், ‘நான் இவ் அல்லல் காண்கில்லேன்’ என்னா, ஆங்கு நின்று அகலப் போனான். |
முனிவன் - வசிட்ட முனிவன்; ‘இல்லை’ என்று உரைக்கலாற்றான்- (இராமன்) வரவில்லை என்று சொல்ல முடியாதவனாய்; ஏங்கினன் நின்றான் - மனம்வருந்திச் சும்மா இருந்தான்; வல்லவன் முகமே - தவத்தால் வலிய வசிட்டனது முகந்தானே; ‘நம்பி வந்திலன்’ - இராமன் மீள வரவில்லை; என்னும் மாற்றம்சொல்லலும் - என்கின்ற வார்த்தையைத் தசரதனுக்குக் கூறுதலும்; அரசன் சோர்ந்தான் -தசரதன் தளர்ந்தான்; துயர் உறு முனிவன் - துன்பமுற்ற முனிவன்; ‘நான் இவ் அல்லல்காண்கில்லேன்’ என்னா - நான் இந்தத் துன்பத்தைக் காணும் ஆற்றல் இல்லேன் என்றுசொல்லி; ஆங்கு நின்று - அவ்விடத்திலிருந்து; அகலப் போனான் - அகன்றுஅப்பால் சென்றான். உள்ளக் கருத்தை முகம் தெரிவிக்குமாதலின், முனிவன் முகத்தைக் கண்டு அவன் அகக்கருத்தைத்தயரதன் அறிந்து சோர்ந்தானாம். ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்பது (குறள். 706.) இங்கே நோக்கத் தக்கது. ஆற்றல் சான்ற சிறந்ததவமுனிவனாகிய வசிட்டன் பற்றும் பாசமும் அற்ற துறவி. அவனாலேயே தசரதனின் துன்பம் காணஇயலவில்லை என்றால், தசரதனது துன்பத்தின் அளவு மிகுதியும், அவன் இராமன்பால்கொண்டிருந்த அன்பின் மிகுதியும் புலப்படும். யாரை நோக்கி வினாவினானோ அவன் முகத்தையேகண்டான் என்றலே பொருந்தும். ஆதலின் வல்லவன் என்பது சுமந்திரனை அன்று. 58 தசரதன் சுமந்திரன் மூலம் செய்தி அறிந்து உயிர் நீத்தல் |