1898. | நாயகன், பின்னும், தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி சேயனோ? அணியனோ?’ என்று உரைத்தலும், தேர் வலானும், ‘வேய் உயர் கானம், தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும், போயினன்’ என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். |
நாயகன் - தசரதன்; பின்னும் - திரும்ப; தன் தேர்ப்பாகனை நோக்கி - தன்னுடைய சாரதியாகிய சுமந்திரனைப் பார்த்து; ‘நம்பி சேயனோ அணியனோ?’என்று உரைத்தலும் - இராமன் தொலைவில் உள்ளானோ அண்மையில் உள்ளானோ என்று கேட்க; தேர் வலானும் - சுமந்திரனும்; தானும் - இராமனும்; தம்பியும் -இலக்குவனும்; மிதிலைப் பொன்னும் - மைதிலியுமாக; வேய் உயர் கானம் -மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு; போயினன் - சென்றான்:' என்றான்-; என்ற போழ்தத்தே - என்று அவன் கூறிய அப்பொழுதே; ஆவி போனான் - (தசரதன்) உயிர் நீத்தான். தயரதன் தன்வாயால் காடு என்ற வார்த்தையைக் கூறுதற்கும் ஒவ்வாது அஞ்சி, முன்பும் ‘வீரன்வந்தனனோ’ என்றதும், இங்கும் ‘சேயனோ அணியனோ’ என்றதும் அறிந்து உணரத் தக்கன. முன்பும்‘மண்ணே கொள்நீ மற்றையது ஒன்றும் மற’ என்று இரண்டாவது வரத்தை மற்றையது என்று தசரதன்குறித்ததை இங்கே நினைவுகூரலாம். 59 |