1901.இருந்த அந்தணனோடு எல்லாம்
     ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை,
     கணவனில் பிரிந்து, தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி,
     மணி பிரி அரவின் மாழ்கி,
அருந் துணை இழந்த அன்றிற்
     பெடை என, அரற்றலுற்றான்;

     இருந்தஅந்தணனோடு - உந்தித் தாமரையில் இருந்த பிரமனோடு;
எல்லாம்ஈன்றவன் தன்னை ஈன - சர்வலோகங்களையும்தந்தருளிய
பரமாத்மாவைப் பெற்றெடுக்க; பெருந்தவம் செய்த நங்கை- பெரிய
தவத்தைச்செய்த பெருமாட்டியாகிய கோசலை; கணவனில் பிரிந்து-
தயரதனாகிய நாயகனைப் பிரிந்து;தெய்வமருந்து இழந்தவரின் -
தேவாமிர்தத்தை இழந்தவர்களைப் போல; விம்மி-துடித்து; மணி பிரி
அரவின் மாழ்கி-
(தனக்குக் கண்ணாகிய) மாணிக்கத்தை இழந்தபாம்பைப்
போல மயங்கி; அருந்துணை இழந்த - அரியஆண்பறவையாகிய
துணையை  இழந்த; அன்றில் பெடை என - அன்றிற்பெண்பறவை போல;
அரற்றலுற்றாள் - புலம்பத்தொடங்கினாள்.

     பரமனுக்கே தாய்தான்; என்றாலும், ‘கணவனை இழந்தோர்க்குக்
காட்டுவது இல்’என்றவகையில் கோசலை அவலம் கொடியது. கோசலையின்
துயரத்தைப் பல உவமைகளால் விளக்கினார்.தேவர்க்கு நிலைபேறு தருவது
அமுதம்; பேரரசி என்ற தகுதிப்பாடு தயரதனால் பெற்றவள் கோசலை.பாம்பு
முதிர்ச்சிக் காலத்தில் மணியை உமிழ்ந்து வெளியே வைத்து இரைதேடும் -
மணி இழந்தால் துடித்து  உயிர் நீக்கும் என்பது  இலக்கியங்களில் வரும்
செய்தி ஆகும். அன்றில் இனைபிரியாதுவாழும் பறவை.  இதனால் இவை
கணவனை இழந்து  துயர் அடையும் கோசலைக்கு உவமை ஆயின.     62