1903.‘ஒன்றோ, நல் நாட்டு உய்க்குவர்;
     இந் நாட்டு உயிர் காப்பார்
அன்றே? மக்கள் பெற்று உயிர்
     வாழ்வார்க்கு அவம் உண்டே?
இன்றே வந்து, ஈண்டு, “அஞ்சல்”
     எனாது, எம்மகன் என்பான்
கொன்றான் அன்றோ தந்தையே?”
     என்றாள் குலைகின்றாள்.

     (மக்கள் தம்மைப் பெற்றோரை) ‘நல் நாட்டு உய்க்குவர் -
மறுமையில்நரகத்தினின்று  நீக்கி நற்கதியில் செலுத்துவர்;  ஒன்றோ? -
அம்மட்டோ;  இந்நாட்டு  உயிர் காப்பார் அன்றே - இந்த நாட்டிலே
வாழும் பொழுதும் பெற்றோர்உயிரைப் பாதுகாப்பார்கள் அல்லவா
(ஆகவே); மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம்உண்டே? -
பிள்ளைகளைப் பெற்று  உயிர் வாழ்கின்றவர்களுக்குத் தீங்கு உண்டாகுமா
(அப்படிஇருக்க);  எம் மகன் என்பான் - எங்களுடைய  மகனாகிய
இராமன் என்பவன்; ஈண்டு -இவ்விடத்தில்; இன்றே வந்து - இன்றைக்கே
வந்து;  ‘அஞ்சல்’ எனாது - பயப்படாதே என்று சொல்லி (உயிர் காத்து)
ஆறுதல் அளிக்காமல்;  தந்தையை - தன்தகப்பனை;  கொன்றான்
அன்றே?’ -
  கொன்றுவிட்டான் அல்லவா; என்றாள் -என்று;
குலைகின்றாள் - நடுங்குகிறாள்.

     “இம்மை உலகத்து  இசையொடும் விளங்கி,  மறுமை  உலகமும்
மறுவின்று எய்துப, செறுநரும்விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த
செம்மலோர்” என்பதால் (அகதா.  66)புதல்வரைப் பெற்றோர்க்குப் புகழ்,
பாதுகாப்பு, மறுமையில் நற்கதி ஆகியவை உண்டு என்பதுநூலோரும்,
உலகமும் துணிந்த துணிவு ஆதல் அறிக. ‘மகள் என்பான்’ என்ற தொடர்
நயம்சிந்திக்கத் தக்கது.                                         64