1906. | ‘அருந் தேரான் அச் சம்பரனைப் பண்டு அமர் வென்றாய்; இருந்தார், வானோர், நின் அருளாலே இனிது; அன்னார் விருந்து ஆகின்றாய்’ என்றனள் - வேழத்து அரசு ஒன்றைப் பெருந் தாள் அன்பின் சூழ் பிடி என்னப் பிணியுற்றாள். |
வேழத்து அரசு ஒன்றை - ஓர் அரச யானையை; பெருந்தாள் - அன்பின்சூழ்பிடி என்ன - பெரிய காலில் அன்பினால் சுற்றிக் கிடக்கும் பெண் யானை போல; பிணி உற்றாள் - நோய் உற்றவளாகிய கோசலை (தயரதனை நோக்கி); ‘அருந் தேரான் அச்சம்பரனை - வெல்லுதற்கரிய தேரில் வந்த சம்பரனை; பண்டு - முற்காலத்து; அமர்வென்றாய் - போரில் வெற்றி கொண்டாய்; வானோர் - தேவர்கள்; நின் அருளாலே இனிது இருந்தார் - உன் கருணையால் இனிமையாக இருந்தார்கள்; அன்னார் -அவர்களது;விருந்து ஆகின்றாய்’ - விருந்தினனாகத் தற்போது ஆகின்றாய்; என்றனள்- போர் செய்யச் சென்ற சம்பரனைப் போரில் வெல்லமாட்டத இந்திரன் தசரதன் துணையைவேண்ட, அதன் பொருட்டுத் தசரதன் சென்று வென்று இந்திரனுக்கு அமராவதி அரசைக் காத்தளித்தசெய்தி, பாலகாண்டம் கையடைப் படலத்து விசுவாமித்திர முனிவன் தசரதனை நோக்கிக் கூறும் ஒன்பதாம் பாடலால் அறியலாம். (322.) யானையைக் கால் தழுவி வருந்தும் பிடி தயரதன் காலைச்சூழ்ந்து வருந்தும் கோசலைக்கு உவமை. 67 |