1910. | அனம் கொள் அளக்கர் இரும் பரப்பில், அண்டர் உலகில், அப்புறத்தில் விளங்கும் மாதர், ‘கற்பினார், இவரின் யாரோ!’ என, நின்றார்; களங்கம் நீத்த மதி முகத்தார்; கான வெள்ளம் கால் கோப்ப, துளங்கல் இல்லாத் தனிக்குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார். |
அளம்கொள் அளக்கர் இரும்பரப்பில் - உப்பளத்தைக் கொண்ட கடலாற்சூழப்பெற்ற நிலவுலகில்; அண்டர் உலகில் -தேவர்உலகில்; அப்புறத்தில் - வேறு இடங்களில்; விளங்கும்மாதர் - கற்புடன் விளங்குகின்ற மாதர்கள்; ‘இவரின் கற்பினார் யாரோ!என - இவர்களைக்காட்டிலும் கற்பிற் சிறந்தவர் யார் உளரோ என்னும்படி; நின்றார் - (அத்தேவிமார்)நின்றார்கள்;களங்கம் நீத்த மதிமுகத்தார் - களங்கம் இல்லாத மதிபோன்ற முகத்தைஉடையவர்களாய அத்தேவிமார்; கான வெள்ளம் கால் கோப்ப- காட்டு நீர்ப்பெருக்கு தன் அடியைச் சூழ உள்ள; துளங்கல் இல்லாத் தனிக் குன்றில் - சிறிதும்அசைந்து கொடுக்காத பெரிய மலையில்; தொக்க மயிலின்- சேர்ந்து இருந்த மயில் கூட்டத்தைப்போல; சூழ்ந்திருந்தார் -அவ் அரண்மனையில் திரண்டிருந்தனர். அடியில் நீர் சூழ மலையில் மயில் திரண்டது போல் என உவமைக்காண்க. கண்ணீர் வெள்ளம்சூழ அரண்மனையில் தேவிமார் எனஉவமைக் கேற்பக் கொள்ளலாம். இனி கான வெள்ளம் என்பதற்கு அவரது அழகுரவோசையாகிய வெள்ளம் என்பாரும் உளர்; பொருந்துமேற் கொள்க. 71 |