சூரியன் உதயமாதல்  

1917.மீன் நீர் வேலை முரசு இயம்ப,
     விண்ணோர் ஏத்த, மண் இறைஞ்ச,
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க,
     சடர்த் தேர் ஏறித் தோன்றினான் -
‘வானே புக்கான் அரும் புதல்வன்’
     மக்கள் அகன்றார்; வரும் அளவும்
யானே காப்பென், இவ் உலகை’
     என்பான் போல, எறி கதிரோன்.

     எறி கதிரோன் - வெயிலொளியை வீசுகின்ற  சூரியன்; ‘அரும்
புதல்வன் -
நம் குலத்து அரிய மகனாகிய தசரதன்; வானே புக்கான் -
கவர்க்க லோகம் புகுந்தான்; மக்கள் அகன்றார் - அவனுடைய  மக்கள்
காட்டிலும்,  கேகய நாட்டிலும் ஆக அகன்று சேய்மையில் உள்ளார்கள்;
வரும் அளவும் - ஆட்சிக்குரிய அவர்கள் வருகின்றவரையிலும்;  இவ்
உலகை யானே காப்பென் -
இந்த உலகத்தை நானே ஆட்சி செய்து 
காப்பாற்றுவேன்;’ என்பான்போல் - என்று சொல்லுபவனைப் போல; மீன்
நீர் வேலைமுரசு இயம்ப -
மீன்களையுடைய நிர் பொருந்திய கடலாகிய
முரசம் ஒலிக்க; விண்ணோர்ஏத்த - தேவர்கள் துதிக்க; மண் இறைஞ்ச-
மண்ணுலகில் உள்ளார் காலை வழிபாடுசெய்து வணங்க; தூநீர் ஒளிவாள்
புடை இலங்க -
தூய நீர்மையுடைய ஒளியாகிய வாள்பக்கத்தில் விளங்க;
சுடர்த் தேர் ஏறித் தோன்றினான்- சுடராகிய தேரில் ஏறித்
தோன்றினான்.

     தசரதன் சூரியகுலத்தவன் ஆதலின்,  சூரியனுக்கு அவன் ‘அரும்
புதல்வன்’ ஆயினன், தன்குலஆட்சியாளர் இறந்தும், அகன்றும்
தடுமாறியபடியால் சந்ததிகள் வந்து ஆட்சிப் பொறுப்பு ஏற்கும்
வரையிலும்தான் உலகை ஆளத் தோன்றியதாகத் தற்குறிப்பேற்றம் செய்தார்.
அரசன் வருங்கால்முரசு இயம்பல்,  தேவர் வாழ்த்தல், உலகர் வணங்கல்,
வாள் புடை இருத்தல், தேர் ஏறுதல்முதலிய உளவாதலின் அவற்றையும்
சூரியன் வருகைக்கு ஏற்பப் பொருத்தினார். ‘ஒளி வாள்’ ஒளியுடையவாள்
என்று அரசனுக்கும், மிக்க ஒளி என்று சூரியனுக்கும் வரும், ‘வாள்’
என்றாலும் ‘ஒளி’என்பதே பொருள் ஆதலி்ன், ‘ஒளிவாள்’ ஒருபொருட்
பன்மொழியாம். ‘மிக்க ஒளி’ என்றாகும்.‘சுடர்த்தேர்’ என்பது  சுடருடைய
தேர் என்று அரசனுக்கும்,  சுடர்களாகிய தேர் என்று சூரியனுக்கும்வரும்.
மற்றவை வெளிப்படை.                                          78