1919. | எட்டுத் திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர்க் கடலுள்; ‘விட்டு நீத்தான் நமை ’ என்பார்; ‘வெய்ய, ஐயன் வினை’ என்பார்; ‘ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ் உலகத்து உளது அன்றோ? உணர்வைச் சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ? தொடர்ந்தும் தேரின் சுவடு’ என்பார். |
எட்டுத்திசையும் ஓடுவான் எழுவார் - எண்திசைகளிலும் ஓடுவதற்காக எழுந்திருப்பார்; விழுவார் இடர்க்கடலுள் - ஆற்றாமையால் அது செய்யமாட்டாது துன்பக்கடலுள் விழுவார்; ‘நமை விட்டு நீத்தான்’ என்பார் - நம்மை விட்டுவிட்டுப் பிரிந்துபோய்விட்டான் என்று கதறுவார்; ‘ஐயன் வினை வெய்ய’ என்பார் - இராமன் செய்தசெயல் கொடியது என்பார்; ஒட்டிப் படர்ந்த தண்டகம் - பொருந்திப் பரவியுள்ள தண்டகவனம்; இவ் உலகத்து உளது அன்றோ? - இந்த உலகத்தில்தான் உள்ளது அல்லவா, உணர்வைச் சுட்டுச் சேர்தல் பழுது அன்றோ? - அறிவைப் பொசுக்கித் தளர்வது குற்றம்அல்லவா; தேரின் சுவடு தொடர்தும்’ - அவன் சென்ற தேரின் சக்கரம் அழுந்திய வடுவைத் தொடர்ந்து சென்று அடைவோம்;’ என்பார் -. துக்கத்தால் நகரமாந்தர் துடித்தபடி இதனால் விளங்கும். 80 |