இராமன் சீதையோடும் இலக்குவனோடும் கானகத்தில் செல்லுதல் சந்தக் கலிவிருத்தம் 1926. | வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் - ‘மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான். |
மையோ- (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ; மரகதமோ- பச்சைநிறஒளிக்கல்லாகிய மரகதமோ; மறிகடலோ- (கரையின்கண் அலைகளால்) மறிக்கின்றகடலோ; மழை முகிலோ -பெய்யும் கார் மேசுமோ; ஐயோ - (உவமை சொல்லமாட்டாதநிலையாகிய) ஐயோ!; வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? -தன்உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின்மறை - சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லையாய் மறைந்துவிடும்படி; பொய்யோஎனும் இடையாளொடும்- இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணியஇடையினை உடைய சீதையோடும்; இளையானொடும் - தம்பியாகியஇலக்குவனோடும்; போனான் - (காட்டு வழியே) நடந்து செல்லலானான். மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு உவமையாயிற்று, மரகதம் பசுமைநிறம்படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல்நீலநிறம் படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின், இயங்குகின்ற இவனது சோபைக்கு உவமையாயிற்று, மழை முகில் - கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடையகாரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனிஉவமை சொல்ல மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். ஆயினும், அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று - “அச்சோ ஐயோ என்னே எற்று எவன்எனுஞ்சொல் அதிசயம் உற இரங்கல்” என்பது சூடாமணி நிகண்டு. திருக்கோவையாரில் (384.) பேராசிரியர், ஐயோ என்னும் சொல்லைக் குறித்து இஃது உவமைக்கண் வந்தது’ என்று கூறியுள்ளமைகொண்டு ஈண்டும் உவமைக்கண் வந்ததாகக் கொள்ளலாம். நீலநிறம் தன்னுள் கொண்ட எதனையும்வெளிவிடாது தன்னையே காட்டி நிற்கும் ஆதலின், நீலமேனியனாகிய இராமனிடத்திலிருந்து வெளிப்படும் ஒளியில் சூரியனது ஒளி மறைந்துவிட்டது என்றார். ‘அழியா அழகு’ என்பது என்றும்மாயாத தூய அழகு எனப்பெறும். அழித்தல் - பிறிதொன்றால் இல்லை என்றாக்கப்படும்.இவ்வழகினும் சிறந்ததோர் அழகு வந்தால் இது அழகில்லை யென்று அழிக்கப்பெறும். அவ்வாறு ஒன்றுஇல்லவே இல்லை ஆதலின், இவன் அழகு ‘அழியா அழகு’ ஆயிற்று. ‘ஓ’ காரம் நான்கும்ஐயப்பொருளின்கண் வந்தன. 1 |