வழியிடையே காட்சிகள் கண்டு மூவரும் மகிழ்ந்து செல்லுதல் 1927. | அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள், கடல் அமுதின் தெளிவு அன்னது ஓர் மொழியாள், நிறை தவம் அன்னது ஓர் செயலாள் வெளி அன்னது ஓர் இடையாளொடும் - விடை அன்னது ஓர் நடையான் - களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான். |
அளிஅன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் - வண்டைப் போன்ற (கரிய) ஒப்பற்றகருமணல் நெருங்கி இருப்பது போன்ற கூந்தலை உடையவறும்; கடல் அமுதின் தெளிவு அன்னது ஓர்மொழியாள்- கடலின்கண் கடைந்து எடுத்த தேவர் அமிழ்தத்தின் தெளிவு போன்றது எனும்படியாகிய ஒப்பற்ற பேச்சினை உடையவளும்; நிறைதவம் அன்னது ஓர் செயலாள் -நிறைந்ததவத்தைப் போன்ற ஒப்பற்ற தூய செயலை உடையவளும்; வெளி அன்னது ஓர்இடையாளொடும்- ஆகாயம் போன்றதாகிய இல்லையான ஒப்பற்ற இடையினை உடையவளுமாகியசீதையோடும்; விடை அன்னது ஓர் நடையான்- இடபத்தை ஒத்த ஒப்பற்ற நடையினை உடையஇராமன்; களிஅன்னமும் - செருக்கினை உடைய ஆண் அன்னமும்; மட அன்னமும்-மடப்பத்தை உடைய பெண் அன்னமும்; நடம் ஆடுவ - சேர்ந்துஉலாவிடுவதை; கண்டான்-. வண்டு கூந்தலின் கருமைக்கும், கருமணல் கருமையோடு நெறிப்புக்கும் உவமையாம். முனிவர் தவம்போன்றது பெண்டிர் கற்பொழுக்கம். இங்குச் செயல் என்பது கற்பினை. களி, மடம் என்பன ஆண்,பெண் என்பனவற்றைக் காட்டும் அடையாளம், தானும் சீதையும் நடப்பது போன்ற குறிப்பினை அவற்றின்பால் கண்டான் இராமன் என்க. ‘நடமாடுதல்’ என்பது வழக்கின்கண் ‘உலாவிடுதல்’என்னும் பொருளில் வருதல் கண்கூடு. இனி அன்னங்கள் நடப்பது நடனம் ஆடுதல் போல உள்ளது என்றலும் ஒன்று. 2 |