1928.அஞ்சு அம்பையும் ஐயன்தனது
     அலகு அம்பையும் அளவா,
நஞ்சங்களை வெல ஆகிய
     நயனங்களை உடையாள்,
துஞ்சும் களி வரி வண்டுகள்
     குழலின்படி சுழலும்
கஞ்சங்களை மஞ்சன் கழல்
     நகுகின்றது கண்டாள்.

     அஞ்சு அம்பையும் - மன்மதனது  மலர் அம்புகள் ஐந்தனையும்;
ஐயன்தனது -இராமனது; அலகு - கூர்மையான;  அம்பையும் -
கணையையும்; அளவா - அளந்து(தனக்குவமை யாகானென்று தள்ளி);
நஞ்சங்களை - கொடிய விடங்களை;  வெல ஆகிய -வெல்லும் தன்மை
படைத்தனவாகிய;  நயனங்களை உடையாள் - அழகிய கண்களை உடைய
சீதை;துங்சும் களி வரி வண்டுகள் - உறங்கும் செருக்குடைய அழகிய
வண்டுகள்;  குழலின்படி -கூந்தலிற் படியும் தன்மையில்; சுழலும் -
சுற்றியிருக்கப்பெற்ற; கஞ்சங்களை -தாமரை மலர்களை; மஞ்சன் கழல் -
மைந்தனாகிய இராமனது  திருவடிகள்;  நகுகின்றது -உவமையாகாதென்று
இகழ்ந்து சிரிப்பதனை;  கண்டாள்-.

     தாமரை, முல்லை, அசோகு, மா, நீலம், என்பன மன்மதனது  மலர்
அம்புகளாம்.  இங்கு மலர்கருதாது  அம்பு என்பதுபற்றிக் கூறப்பெற்றது.
தேனுண்டு உறங்கும் செருக்குடைய வண்டுகள். குழலின்படி- வேய்ங்குழல்
போல ரீங்காரித்து என்றும் நெய்குழல்போல போவது வருவது ஆகி
என்றும் ஆம்.இராமனது திருவடி அழகிற்குத் தாமரை ஒப்பாகாமை கருதி
மகிழ்ந்தாள் சீதைஎன்றவாறாம்.                                    3