1932.பல் நந்து உகு தரளம் தொகு
     படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை,
     அயல் நந்து உறை புளினம்,
சின்னம் தரும் மலர் சிந்திய
     செறி நந்தனவனம், நன்
பொன் உந்திய நதி, கண்டு உளம்
     மகிழ்தந்தனர், போனார்.

     பல்நந்து  உகு - பல சங்குகள் சுக்கிய;  தொகுதரளம் படர்
பந்திகள் படுநீர் -
திரண்ட முத்துகளின் தொடர்ந்த வரிசைகள்
பொருந்திய நீர்த்துறைகளையும்;  அன்னம் துயில் வதிதண்டலை -
அன்னப்பறவைகள் தூங்குகின்ற சோலைகளையும்;  அயல் நந்து  உறை
புளினம் -
அருகேசங்குகள் தங்கியுள்ள மணல் மேடுகளையும்;  சின்னம்
தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் -
விடுபூவாக விழும் மலர்களைச்
சிதறிய நெருங்கிய பூந்தோட்டங்களையும்;  நன் பொன்உந்தியநதி -
நல்ல பொற்பொடிகளைத் தள்ளுகின்ற ஆறுகளையும்;  கண்டு- பார்த்து;
உளம் மகிழ்ந்தனர் போனார் - மனம் மகிழ்ச்சிஅடைந்தவர்களாய்ச்
சென்றார்கள்.

     இராமன் கங்கை சேரும் முன் தமசா நதிக் கரையில் தங்கி,  தேவ
சுருதி,  கோமதி என்னும்ஆறுகளைக் கடந்தான் என்று வால்மீகி கூறியது
கருதி இங்கே ‘படு நீர்’ ‘பொன் உந்திய நதி’என்றார் என்க.             7