இராமன் எரி வளர்த்து வழிபட்டு முனிவர் விருந்து ஏற்றல் 1951. | துறை நறும் புனல் ஆடி, கருதியோர் உறையுள் எய்தி, உணர்வுடையோர் உணர் இறைவற் கைதொழுது, ஏந்து எரி ஓம்பி, பின் அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான். |
(இராமன்) துறை நறும் புனல் ஆடி - கங்கைத் துறையில் மணம் வீசும் நீரில்குளித்து; கருதியோர் உறையுள் எய்தி - வேத முனிவரர் தவச்சாலையை அடைந்து; உணர்வுடையோர் உணர் - ஞானிகளால் உணரப்படுகின்ற; இறைவனைக் கை தொழுது -பரம்பொருளைக் கை கூப்பி வணங்கி; ஏந்து எரி ஓம்பி - உயர்ந்துள்ள யாகாக்கினியைவழிபட்டு; பின் - பிறகு; அறிஞர் - ஞானியராய முனிவரது; காதற்கு -அன்பினுக்கு; அமை விருந்து ஆயினான் - பொருந்திய விருந்தினனாக ஆனான்-. இராமனும் பரம்பொருளை வழிபட்டான் என்பது நான் எடுத்துக்கொண்ட அவதாரத்துக்கு ஏற்ப, தன்னை மனிதனாகவே கருதிப் பரம்பொருளை வழிபட்டான் என்க. 26 |