குகனது அறிமுகம்  

கலிவிருத்தம்

1953.ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

     ஆய காலையின் - அந் நேரத்தில்; ஆயிரம் அம்பிக்கு நாயகன்-
ஆயிரம்நாவாய்களுக்குத் தலைவனும்;  தூய கங்கைத் துறை விடும்
தொன்மையான் -
தூய்மையானகங்கைத் கரையில் நெடுங்காலமாகப் படகு
விடும் தன்மை  உடையவனும்; காயும் வில்லினன் -பகைவரைச் சீறி
அழிக்கும் வில்லுடையவனும்;  கல் திரள் தோளினாள் - மலை போல்
திரண்ட தோளை உடையவனும் ஆகிய; போர் - போர்த் தொழிலில் வல்ல;
குகன் எனும்நாமத்தான் - குகன் என்ற பெயரை உடையவன்.

     குளகச் செய்யுள். ‘இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்’ (1961)
என்னும் செய்யுள்அடியிற் சென்று முடியும். இனி வரும் செய்யுள்களில்
குகனைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்கிறார்கவிஞர்.                1