1959. | கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன், நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன், பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான். |
கச்சொடு ஆர்த்த - அரைக்கச்சிலே கட்டிய; கறை கதிர் வாளினான் -இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த வாளை உடையவன்; நச்சு அராவின் - விடம்பொருந்திய பாம்பைப் போல; நடுக்குறு நோக்கினன் - பிறர் நடுக்கம் அடைகின்றகொடிய கண் பார்வை உடையவன்; பிச்சாரம் அன்ன பேச்சினன் - பித்தர்களைப் போலஒன்றுக் கொன்ற தொடர்பில்லாமல் பேசக்கூடிய பேச்சினை உடையவன்; இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான் - தேவேந்தி ரனது வச்சிராயுதம் போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன், வேடர்கள் என்பதால் தெளிவற்ற பேச்சை உடையவன் என்றார். நடுப்பகுதி சிறந்து இரண்டுபக்கமும் பெருத்து இருப்பதனால் வச்சிரப்படை போலும் இடுப்பு என்றார். 7 |