குகன் இராமனைக் கண்டு பணிந்து கையுறைப் பொருளை ஏற்க வேண்டுதல் 

1965.அண்ணலும் விரும்பி, ‘என்பால்
     அழைத்தி நீ அவனை’ என்ன,
பண்ணவன், ‘வருக’ என்ன,
     பரிவினன் விரைவில் புக்கான்;
கண்ணனைக் கண்ணின் நோக்கிக்
     கனிந்தனன்; இருண்ட குஞ்சி
மண் உறப் பணிந்து, மேனி
     வளைத்து, வாய் புதைத்து வின்றான்.

     அண்ணலும் - இராமனும்;  விரும்பி - குகனை மனத்தால் விரும்பி;
‘நீஅவனை என்பால் அழைத்தி’ என்ன - இலக்குவா? நீ அக்குகளை
என்னிடம் அழைத்து வருக என்றுசொல்ல; பண்ணவன் - பண்பிற் சிறந்த
இலக்குவன்; ‘வருக’ என்ன- (குகனே) வருக என்று அழைக்க; பரிவினன்-
(அக்குகனும்) மனத்தில் அன்பு மிக்கவனாய்; விரைவில் புக்கான் -
வேகமாக உள்ளே புகுந்து; கண்ணனை - கண்ணழகுடைய இராமனை;
கண்ணின் நோக்கிக் களித்தனன் - தன் கண்களால் பார்த்து மகிழ்ச்சி
அடைந்து; இருண்ட குஞ்சி - இருள் நிறமான தலைமுடி;  மண் உறப்
பணிந்து
- பூமியில் விழுமாறுவிழுந்து வணங்கி;  மேனி வளைத்து -
உடம்பைக் குறுக்கிக் கொண்டு; வாய் புதைத்து -வாயினைக் கைகளால்
மூடிக் கொண்டு;  நின்றான்-.

     பெரியோரைத் தரிசிப்பார் அடக்க ஒடுக்கமாக நிற்கும்முறையில்
இராமனாகிய தெய்வத்தின் முன்னிலையில் குகன் நின்றமை அறியத் தக்கது.
“அடக்கம்என்பது அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அது பணிந்த மொழியும்
தணிந்த நடையும் தனை மடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின” என்னும்
பேராசிரியர் உரை இங்கு அறியத் தக்கது (தொல். பொருள்.மெய்ப். 12)
பண்ணவன் - வலிமை உடையவன் எனலும் ஆம்.                   13