இராமன் நகர் நீங்கிய காரணத்தை உசாவி அறிந்து குகன் வருந்துதல்  

1972.‘திரு நகர் தீர்ந்த வண்ணம்,
     மானவ! தெரித்தி’ என்ன,
பருவரல் தம்பி கூற,
     பரிந்தவன் பையுள் எய்தி,
இரு கண் நீர் அருவி சோர,
     குகனும் ஆண்டு இருந்தான், ‘என்னே!
பெரு நிலக் கிழத்தி நோற்றும்,
     பெற்றிலள் போலும்’ என்னா,

     ‘மானவ - பெருமை படைத்தவனே!;  திரு நகர் தீர்த்த வண்ணம்
தெரித்தி’ என்ன-
அயோத்தி நகரை விட்டு நீங்கி வனம் புகுந்த
காரணத்தை விளக்கக் கூறுக என்று குகன்கேட்க; பருவரல் தம்பி கூற -
துன்பத்தை உடைய இலக்குவன் எடுத்துச் சொல்ல; குகனும்பரிந்த வன்
பையுள் எய்தி -
குகனும் இரங்கியவனாய்த் துன்பமுற்று;  இரு கண் நீர்
அருவிசோர -
இரண்டு கண்களிலிருந்து  நீர் அருவிபோலக் கீழே விழ;
‘என்னே!பெருநிலக்கிழத்தி நோற்றும் - ஐயகோ! பெருநிலமகள்
இராமனால் ஆளப்படுதற்கும் தவம்செய்திருத்தும்; பெற்றிலள் போலும்-
அந்தப் பாக்கியத்தைப் பெற்றாளில்லையே; என்ன - என்று சொல்லி;
ஆண்டு இருந்தான் - அத்தவச் சாலைக்குப் புறம்பேதங்கியிருந்தான்.

     என்னே! என்பது  இரக்கக் குறிப்பு;  பூமிதேவிக்கு நேர்ந்த பாக்கியம்
இழப்பு என்றஇரண்டையும் ஒருசேர எண்ணியதனால் ஏற்பட்டது. தசரத
குமாரனாகியதால் இராமனால் ஆளும் பாக்கியம்பெற்ற பூதேவி, அதனை
வரத்தால் இழந்தபடியை நினைத்து இரங்கினான் குகன். இராமனைக்
கேட்கும்இடங்களில் எல்லாம் இலக்குவன் பதில் உரைப்பது அறியத் தக்கது. இராமனே அதனை விரிவாகக்கூறல்  நாகரிகம் ஆகாமை அறிக.       20