குகன் இராமனைத் தன் இருப்பிடத்திலே தங்க வேண்டுதல் சந்தக் கலிவிருத்தம் 1979. | ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான், ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான், காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத் தேவியொடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: |
ஏவிய மொழி கேளா - இராமன் நாவாய் கொணரும்படி கட்டளையிட்ட வார்த்தையைக்கேட்டு (எங்கே இராமன் தன்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என்னும் ஏக்கறவால்); இழிபுனல்பொழி கண்ணான் - இறங்குகின்ற நீர் இடையறாது சொரிகின்ற கண்ணனாய்; ஆவியும் உலைகின்றான் - உயிர் துடிக்கப் பெறுபவனாய்; அடி இணை பிரிகல்லான் - இராமனதுதிருவடிகளை விட்டுப் பிரிய மாட்டாதவனாய்; காவியின் மலர், காயா, கடல், மழைஅனையானை - நீலோற்பல மலர், பூவைப் பூ, கடல், மேகம் இவற்றை ஒத்த கருநீல நிறம்படைத்த இராமனை; தேவியொடு அடி தாழா - சீதையோடு சேர்த்து அடியில் வீழ்ந்து வணங்கி; சிந்தனை - தன் எண்ணத்தை; உரை செய்வான் - கூறத் தொடங்கினான். அன்பு மீக்கூர்ந்த அவலத்தின் மெய்ப்பாடுகள் புனல்பொழிகண், உலையும் ஆவி என்பன.இராமனுடைய நிறத்துக்கு நான்கும் உவமை. இங்ஙனம் பல உவமைகளை ஒருசேரக் கூறி இராமனது பேரழகினை அனுபவித்தல் கம்பர் இயல்பு; எடுத்துக்காட்டு: 1926. 27 |