1981. | ‘தேன் உள; தினை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக் கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ? நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; |
தேன் உள; தினை உண்டு - தேவர்களும் தூயது எனக் கருதி உண்ணுதற்குப் பொருத்தமானதேனும், தினையும் எம்மிடம் உண்டு; தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள - தேவர்களும்அவியிற் கொள்ளும் புலால் உண்டு; துணை நாயேம் உயிர் உள - அடியேங்களுடைய உயிர்உங்களுக்குத் தொண்டு செய்ய உள்ளவையே; விளையாடக் கான் உள - தேவியோடு விளையாடிப்பொழுது போக்க இனிய காடுகள் உள்ளன; புனல் ஆடக் கங்கையும் உளது - நீரிலே முழுகிவிளையாடக் கங்கையாறும் இருக்கிறது; நான் உளதனையும் - நான் உடன் உள்ளவரையும்; நீ எம்பால் நட இனிது இரு - நீ எம்மிடத்துக்கு நடப்பாயாக, இனிது இருப்பாயாக.’ தேன் உள தினை உண்டால் என்பதனைத் தனியே பிரித்து, தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள என்று உரைப்பதும் உண்டு. வேள்வியில் அவியாகச்சொரியப்படுதலின் தேவரும் உண்ணுதற்குரிய ஊன் எனக் கூறியதாகக் கொள்ளலாம். முன்பு ‘தேனும்மீனும் அமுதினுக் கமைவதாகத் திருத்தினன்; திருவுளம் என்கொல்’ (1966.) என்று குகன்வினாவிய பொழுது. இராமன் விருத்த மாதவரை நோக்கி, முறுவலனாய் ‘பரிவினில் தழீஇய என்னில்பவித்திரம்’ என்று தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் நிலையில் கூறியமைந்ததையும் அதனை உண்ணாதுஉளத்தால் ஏற்றுக்கொண்டதையும் அறிந்த குகன் மீண்டும் அதே பொருள்களைக் கூறுவதாக அமையாமல் மீனைத் தள்ளி, இராமன் முதலியவர்கள் உண்ணுதற்கேற்ற தேனும், தினையும் மட்டுமே கூறினான்என்க. குகனது பண்பு முதிர்ச்சியைக் காட்டிக் கம்பருக்கும் ஏற்றம் தருவது உணரத் தக்கது. பின்னரும் “கனி காயும் நறவு இவை தரவல்லேன்” என்று குகன் கூறுதல் (1990.) காண்க. உயிர்இராமனது உடைமையாயினும் உடம்பு உள்ளவரைதான் பணி செய்ய இயலுமாதலின் ‘ஊன் உள துணை நாயேன்உயிர் உள’ எனக் குகன் கூறியதாகக் கொள்வதும் பொருந்துவதே. |