இராமன் மீண்டும் வரும்போது குகனிடம் வருவதாகக் கூறல்  

1984.அண்ணலும் அது கேளா,
     அகம் நிறை அருள் மிக்கான்,
வெண் நிற நகைசெய்தான்;
     ‘வீர! நின்னுழை யாம் அப்
புண்ணிய நதி ஆடிப்
     புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில்
     குறுகுதும் இனிது’ என்றான்.

     அண்ணலும் - இராமனும்;  அது கேளா - அதனைக் கேட்டு; அகம்
நிறை -
மனம் நிறைந்த; அருள் மிக்கான் - கருணை மிகுந்தவனாய்;
வெண் நிற நகைசெய்தான் - (மகிழ்ச்சியை வெளிக்காட்டி) வெண்மையான
ஒளிபடைத்த முறுவல் செய்தானாய்; ‘வீர! யாம் - குகனே! நாங்கள்; அப்
புண்ணிய நதி ஆடி -
அந்தப் புண்ணியநதிகளில் நீராடி;  புனிதரை
வழிபாடு  உற்று -
(அங்கங்கே உள்ள) முனிவர்களை வழிபாடுசெய்து;
எண்ணிய சில நாளில் - வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில்;
நின்னுடை - உன்னிடத்துக்கு;  இனிது  குறுகுதும் - இனிமையாக வந்து
சேர்வோம்;’  என்றான் -.

     வனவாசம் பதினான்கு ஆண்டுகள் ஆயினும், அன்பால் அழைக்கும்
குகனுக்கு ஆறுதலாகக் கூறவேண்டி,‘எண்ணிய சில நாள்’ என்றான்
இராமன் என்க.  முன்னர் கோசலையைத் தேற்ற வேண்டி இராமன்,
‘எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு,  அவை பத்தும் நாலும் பகல்
அலவோ’  (1626)  என்றுகூறியுள்ளதையும் இங்குக் கருதுக. பதினான்கு
ஆண்டுகளைப் பதினான்கு நாள்கள் என்று அங்கே கூறியது போலக்
குகனிடம் ‘எண்ணிய சில நாள்’ என்றான் என்க.                     32