குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல்  

1985.சிந்தனை உணர்கிற்பான்
     சென்றனன், விரைவோடும்;
தந்தனன் நெடு நாவாய்;
     தாமரை நயனத்தான்
அந்தணர்தமை எல்லாம்,
     ‘அருளுதிர் விடை’ என்னா,
இந்துவின் நுதலாளோடு
     இளவலொடு இனிது ஏறா.

     (குகன்) சிந்தனை உணர்கிற்பான் விரைவோடும் சென்றான் -
(இராமனது)மனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று; நெடுநாவாய்
தந்தனன்-
பெரியமரக்கலங்களைக் கொணர்ந்தான்; தாமரை நயனத்தான்-
தாமரை மலர்போலும் கண்களைஉடைய இராமன்; அந்தணர் தமை
எல்லாம் -
முனிவர்கள் எல்லாரையும்;  ‘விடைஅருளுதிர்’ என்னா -
‘எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்’ என்று கேட்டுப் பெற்று; இந்துவின்
நுதலாளோடு -
பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்;
இளவலொடு -இலக்குவனோடும்; இனிது ஏறா - இனிமையாக
அந்நாவாயில் ஏறி,

     சென்றனன் முற்றெச்சம். வடிவில் முற்றுவினையாய் எச்சப்பொருள்
தரும் இத்தகையன முன்னும்உள; பின்னும் வரும். பொருள் நோக்கி
இலக்கணம் உணர்க.                                           33