சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியைக் குகனிடம் இராமன் வினாவல் 1989. | அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி, ‘சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன, பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா, ‘உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது’ என்றான். |
ஐயன் - இராமன்; அத்திசை உற்று - கங்கையின் அக்கரையை அடைந்து; அன்பனை முகம் நோக்கி - குகனைப் பார்த்து; ‘சித்திர கூடத்தின் செல் நெறி பகர்’என்ன - சித்திரகூடத்திற்குச் செல்லும் வழியைக் கூறுக என்று கேட்க; (குகனும்) பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் - இராம பக்தியால் தன்னுயிரையும் இராமனுக்கு ஈநதுவிடும் அன்புடையனாகி; அடி தாழா - இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி; ‘உத்தம! அடிநாயேன் ஓதுவது உளது’ என்றான் - எல்லோரிலும் மேம்பட்டவனே! நாய்போல் கடைப்பட்டஅடிமையாகிய யான் சொல்லுவது உளது’ என்று சொன்னான். “ஆணல்லன் பெண்ணல்லன்” என்னும் திருவாய்மொழியில் ‘இவன் உலகத்துக் காணும் ஆண்களுள்ஒருவன் அல்லன்; புருஷோத்தமன் என்பதாயிற்று’ என்னும் ஈட்டுரையை இங்குக் கருதுக. (திவ்ய.3062) தன்னைத் தாழ நினைத்துக் கூறுவார் நாயை உவமையாக் கோடல் வழக்கு. குகன் பலஇடங்களிலும் தன்னை ‘நாய்’ எனக் கூறல் காண்க. 37 |