1995. | ‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; |
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? - துன்பம் உளதானால் அல்லவா சுகம்உண்டாகும்; அது அன்றிப் பின்பு உளது - அச்சுகம் இப்பிரிவாகிய துன்பத்துக்குப் பின்புஉறுதியாக உளது; ‘இடை மன்னும் பிரிவு உளது’ என உன்னேல் - இடையே இப்படி நிலையான ஒருபிரிவு உண்டாகியுள்ளது என்று மனத்தில் கருதாதே; ஒரு நால்வேம் முன்பு உளெம் - இராமஇலக்குவ பரத சத்துருக்கனன் என்று ஒரு நான்கு சகோதரர்கள் முன்பிருந்தோம்; முடிவு உளது எனஉன்னா அன்பு உள நாம் - கடைபோயிற்று என்று கருதமுடியாது வளர்ந்து கொண்டே செல்லும் அன்பினை மிகவும் உடைய நாம்; இனி ஓர் ஐவர்கள் உளரானோம் - இனிமேல் (உன்னோடு) ஐந்து சகோதரர்கள் ஆக; ஆனோம்-. தன்னோடும் தம்பியோடும் சீதையோடும் குகனைப் பணித்ததோடன்றிப் பரதசத்துருக்கனர்களோடும் குகனைப் பணித்த தோழமை அறிந்து இன்புறத்தக்கது. துன்பத்திற்குப்பின்னர் இன்பம்; இப்பிரிவின் பின் ஓர் இன்பம் உண்டு ஆதலின் அவ் இன்பத்தைத் தருவதாகஇதனை நினைய வேண்டுமே அன்றித் துன்பமாக நினைத்தல் ஆகாது என்றானாம் - அன்பிற்கு முடிவுஇல்லை. அது மேலும் வளர்ந்து கொண்டே போகும்; எனவே, இச் சகோதரத்துவத்துக்கும் முடிவில்லைஎன்றானாம். ‘ஓர்’ உரை அசை. 43 |