குகன் விடைபெற்றுச் செல்ல மூவரும் வனத்துள் மேலும் செல்லல்  

1998.பணி மொழி கடவாதான்,
     பருவரல் இகவாதான்,
பிணி உடையவன் என்னும்
     பிரிவினன், விடைகொண்டான்;
அணி இழை மயிலோடும்
     ஐயனும் இளையோனும்
திணி மரம், நிறை கானில்
     சேணுறு நெறி சென்றார்.

     பணி மொழி கடவாதான் - இராமன் இட்ட கட்டளை வார்த்தையை
மீறாது; பருவரல்இகவாதான் - இராமனது பிரிவினால் ஏற்பட்ட துன்பமும்
நீங்காது; பிணி உடையவன்என்னும் பிரிவினன் - நோயுற்றான் என்று
சொல்லும்படியான பிரிவுத் துன்பத்தை உடையனாய்;விடை கொண்டான்-
(குகன்) உத்தரவு பெற்றுச் சென்றான்; அணி இழை மயிலோடும்ஐயனும்
இளையோனும்-
அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய
சீதையோடும்இராமனும் தம்பி இலக்குவனும்; திணி மரம் நிறை கானில்-
வலிய பெரு மரங்கள்நிறைந்துள்ள காட்டில்;  சேண் உறு நெறி - நெடுந்
தொலையான வழியில்;  சென்றார்- சென்றார்கள்.

     இராமன் ஆணையை மீறாமல் துன்பத்தைத் தாங்கிக் குகன்செல்ல,
மூவரும் காட்டில் நெடுந்தொலை சென்றனர். காட்டின் உள்ளே செல்லச்
செல்லப்பெருமரங்கள் செறிந்திருக்கும் ஆதலின் ‘திணி மரம் நிறை கானில்’
எனவே, காட்டின் உள்பகுதியில் செல்வாராயினர் என்பது அறியப்படும்.  46