காட்டு வழியில் இராமன் சீதை இலக்குவனோடு செல்லுதல் சந்தக் கலிவிருத்தம் 1999. | பூரியர் புணர் மாதர் பொது மனம் என, மன்னும் ஈரமும், ‘உளது, இல்’ என்று அறிவு அரும் இளவேனில், ஆரியன் வரலோடும், அமுது அளவிய சீதக் கார் உறு குறி மானக் காட்டியது, அவண் எங்கும். |
பூரியர்- அறிவிலராய கீழோர்; புணர் -சேர்கின்ற; மாதர் - விலைமகளிரின்; பொதுமனம் என -எல்லோர்க்கும் பொதுவாகிய மனம்போல; மன்னும் ஈரமும், ‘உளது இல்’ என்று அறிவு அரும் இளவேனில் - பொருந்தியஈரப்பசையும் உள்ளதோ இல்லதோ என்று அறியமுடியாத (கோடையாகிய) இளவேனிற் காலத்தே; ஆரியன்- இராமன்; வரலோடும் - வன நெறியில் வந்து சேர்ந்த அளவில்; அவண்எங்கும் - அவ்விடம் எல்லாவற்றிலும்; அமுது அளவிய- அமுதம் கலந்த; சீதம் - குளிர்ச்சியான; கார் உறு குறி - மேகம்வருகின்ற அடையாளத்தை; மான- பெருமை உற; காட்டியது - காண்பித்தது. இராமன் காட்டுக்கு வந்ததனால் காட்டின் வெப்பம் தணிந்து மழை வருவதற்கானஅடையாளங்கள்தோன்றத் தொடங்கின என்றவாறாம். பொருட் பெண்டிர் மனம் வெளிக்கு அன்புள்ளது போல - அதாவது ஈரம் உள்ளது போலக் காட்டி, உள்ளே பொருளின்மேல் ஆசை தங்கி இருக்கும். அதுபோலவே இக் காடும் முதுவேனில்போல் வறட்சி உடையதாகவும் இல்லாமல், துளிர்விட்டு ஈரம் உள்ளது போலவும் உண்மையில் ஈரம் அற்றதாகவும் இளவேனிற் காலத்தில் உள்ளது என்றவாறாகும்.“பொன் விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே” (353) தாடகை வதைப் படலத்துப்பாவையின் தன்மையை முன்னரும் இவ் உவமையால் கூறினார். 1 |