2002.‘பாண், இள மிஞிறு ஆக,
     படு மழை பணை ஆக,
நாணின தொகு பீலி
     கோலின நடம் ஆடல்,
“பூணியல்! நின சாயல்
     பொலிவது பல கண்ணின்
காணிய” எனல் ஆகும்,
     களி மயில் - இவை காணாய்!

     பூண்இயல் - அணிகளை இயல்பாக  உடையவளே!;  களிமயில் -
களிப்புநிறைந்த மயில்கள்; இள மிஞிறுபாண் ஆக - இளைய வண்டு
பாட்டுப் பாடும் பாணன்ஆகவும்;  படு மழை- பொழிகின்ற  மழையின்
ஒலி;  பணை ஆக - பறை ஒலியாகவும்கொண்டு; நாணின -
வெட்கமுற்றனவாய்; தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகைகளை;
கோலின -விரித்து  வளைத்தனவாய்;  நடம்ஆடல் - நடனம் ஆடுதல்;
நின சாயல் பொலிவது -உன்னுடைய சாயல் தம்மிடத்தேவிளங்குவதை;
பல கண்ணில் - தம்முடைய தோகையில் உள்ளபலகண்களால்; காணிய-
காண்பதற்கு;  எனல் ஆகும் -என்று சொல்லாம்படியுள்ள; இவை - இக்
காட்சிகளை;  காணாய்  -.

     தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித்
தோன்றா;  விரித்தவழிகண்கள் தோன்றும் ஆதலின்,  ஆடும் மயில் தம்
தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல்தம்மிடத்தே
பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது  போலும் என்று கூறினார்.           4