பரத்துவாச முனிவன் இராமனை எதிர்கொள்ள வருதல்  

2018.அருத்தியின் அகம் விம்மும்
     அன்பினன், ‘நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று
     இன்று’ எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப்
     பர முனி, பல நோயின்
மருத்துவன் அனையானை,
     வரவு எதிர்கொள வந்தான்.

     பரத்துவன் எனும் நாமப் பரமுனி - பரத்துவாசன் என்னும் பெயரை
உடைய மேலானமுனிவன்;  அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் -
மகிழ்ச்சியினால் மனம்பூரிக்கின்ற அன்புடையவனாய்; ‘நெடு நாளில்
திருத்திய வினை இன்று முற்றிற்று’ எனல்தெரிகின்றான் -
நீண்டநாளாக ஒழுங்குறச் செய்த தவம் இப்பொழுது  பயனைத் தரும் நிலை
அடைந்தது  என்று நன்றாக ஆராய்ந்தறிகின்றவனாய்; பல நோயின்
மருத்துவன் அனையானை -
பிறவிப் பிணிக்கு மருத்துவனாக
உள்ளவன்போல உள்ள இராமனை;  வரவு எதிர் கொள வந்தான் -
வருகையை வரவேற்க வந்தான்.

     பரம் - மேல்;  பரமுணி - மேலான முனி;  யாவரினம் மேம்பட்ட
முனிவன். ‘பவ நோயின்மருத்துவன்’ என்பதனை, ‘எருத்துக் கொடி
உடையானும்  பிரமனும் இந்திரனும் மற்றும், ஒருத்தரும்இப்பிறவி யென்னும்
நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை,  மருத்துவனாய் நின்ற மாமணி
வண்ணாமறுபிறவி தவிரத்,  திருத்தி உன் கோயில் கடைபுகப் பெய்’ (திவ்ய.
457.) என்பதை ஒப்புநோக்கி அறிக.  இராமன் தன்னை அவதாரத்தால்
மனிதனாக அறியினும் முனிவர்கள் அவனைப்பரம்பொருளாக உணர்தலின்,
‘நெடுநாளில் திருத்திய வினை இன்று முற்றிற்று’ என்று பரத்துவாசன்கூறி
மகிழ்ந்தானாம்.                                                20