2024. | ‘ “ துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது” என்னா, ஒப்பு அறும் மகன் உன்னை, “உயர் வனம் உற ஏகு” என்று, எப் பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன்? என்றான். |
‘என் துணையவன் - என் நண்பனாகிய தயரதன்; ஒப்பு அறும் மகன் உன்னை- உவமை சொல்ல முடியாத மகனாகிய உன்னை; துப்பு உறழ் துவர் வாயின் தூய்மொழிமயிலோடும் - பவளத்தை ஒத்த செந்நிறமான வாயினை உடைய தூய மொழிகளைப் பேசும் மயிலனைய சாயலை உடைய சீதையோடும்; அப்பு உறு கடல் ஞாலம் - நீர் பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகத்தை; கடிது ஆளுதி - விரைவாக ஆள்வாயாக; என்னா - என்று கூறி; ‘உயர் வனம் உற ஏகு’ என்று - (உடனே) மரங்கள் உயர்ந்துள்ள காட்டுக்குச் சேரச்செல்என்று கூறி; எப் பரிசு - எவ்வாறு; உயிர் உய்ந்தான் - உயிருடன் வாழ்பவன்ஆனான்;’ என்றான்-. நாளையே பட்டாபிஷேகம் என்று கூறி, உடனே ‘கான் ஏகு’ என்றதை நினைத்து இவ்வாறுகூறப்பட்டது. இவ்வாறு உன்னை வனம் அனுப்பிய பிறகும் தயரதனால் எவ்வாறு உயிர் வாழமுடிந்தது? என்றானாம் - தயரதன் இறந்த செய்தி இராமன் அறியாததாதலின் பரத்துவாசன் அதனை அறிந்திலன் ஆயினும் தன்துணையவனைப் பற்றிய பரத்துவாசனது அனுமானம் பொய்யாகாமை ‘எப் பரிசுஉயிர் உய்ந்தான்’ என்னும் கூற்றில் புலனாதல்காண்க. 26 |