இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல் 2037. | ‘நீங்கல் ஆற்றலள் சனகி’ என்று, அண்ணலும் நினைந்தான்; ஓங்க வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்; தாங்கு வெங் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த பாங்கு வெங் கனல்; பங்கய வனங்களாய்ப் பரந்த; |
அண்ணலும் - இராமனும்; ‘சனகி - சீதை; நீங்கல் - இந்தக் காட்டைக் கடத்தற்கு; ஆற்றலள்’ - வல்லமை உடையவளல்லள்; என்று-; நினைந்தான் - (நினைந்த அளவிலேயே); ஓங்கு வெய்யவன் - வெப்பத்தால் உயர்ந்தசூரியன்; உடுபதி என - விண்மீன்களுக்குத் தலைவனான சந்திரனே என்னும்படி; கதிர்உகுத்தான் - தன் ஒளியைத் தண்மையாகச் சிந்தினான்; வெம் தாங்கு கடந்து -வெம்மையைத் தாங்கியுள்ள காட்டில்; உலவைகள் - காய்ந்து போன மரங்கள்; தழை கொண்டு தழைத்து - தழை உடையவாய்த் தழைத்தன; வெங்கனல் பாங்கு - கொடியநெருப்புப் போன்ற பக்கங்கள் எல்லாம்; பங்கய வனங்களாய்ப் பரந்த - தாமரைக்காடாகப் பரவின. பிராட்டியின் மென்மை கருதியும் பாலையின் வெம்மை கருதியும் இராமன் நினைத்தானாக, பாலை சோலையாக மாறியது என்றார். இது முன்னர்த் தாடகை வதைப்படலத்துக் கோசிக முனிவன்இராமலக்குவர்கள் பாலை வெம்மையைத் தாங்கும் பொருட்டு இரு மந்திரங்களை அவர்களுக்கு உபதேசித்தான் என்று கூறவாலும், நினைத்த அளவில் அங்கும் ‘கொழுங்கனல் எரியும் வெஞ்சுரம்,தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது’ (357.) என்று கூறலானும்அறிக. 39 |