2039.குழுமி மேகங்கள் குமுறின,
     குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின்
     முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல,
     பகை இல், தணிந்த,
உழுவையின் முலை மான் இளங்
     கன்றுகள் உண்ட;

     மேகங்கள் குழுமிக் குமுறின - மேகங்கள் கூட்டமாய் வந்து
சப்தமிட்டு;  குளிர்துளி கொணர்ந்த - குளிர்ந்த மழைத்துளியை
மண்ணுக்குக் கொண்டு தந்தன;  முழுவில்வேடரும் - இலக்கணத்தால்
நிரம்பிய வில்லை உடைய வேடர்களும்; முனிவரின் உயிரைமுனிகிலர் -
தவத்தோர்களின் உயிரைக் கோபித்துத் தீங்கு செய்தாரில்லை; மான்இளங்
கன்றுகள் -
மானின் இளைய குட்டிகள்;  தழுவி நின்றன.  பசி இல,
பகை இல தணிந்தஉழுவையின் முலை-
தம்மைத் தழுவி நின்றவனாகிய
பசியும் பகையும் இல்லாது தணிந்த புலிகளின்முலையை; உண்ட -
உண்டன.

     பகை நீங்கி உயிரினங்கள் நட்பாயின என்பதாம்.                41