2044.பந்த ஞாட்புறு பாசறை,
     பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத்
     தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின்
     கொதிப்பது -அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக்
     குளிர்ந்தது - அவ் வனமே!

     அவ்வனம் - அந்தக் காடு; பந்த ஞாட்பு உறு - பிணிப்புடைய
போர்க்களத்தில் பொருந்திய; பாசறை - பாசறைக் கண்ணும்;  பொருள்
வயின் -
பொருளைத் தேடும் இடத்தும்; பருவம் தந்த - பிரிந்து  சென்று
‘இன்ன காலத்தில்வருவேன்’ என்று காலம் குறித்துச் சென்ற; கேள்வரை -
தம் கணவரை; உயிர் உறத்தழுவினர் பிரிந்த - முன்பு உயிர் பொருந்தத்
தழுவியவராய்ப் பிரிந்து இருக்கின்ற; கந்த ஓதியர் - மணம் வீசும் கூந்தலை
உடைய மகளிர்; சிந்தையின் - மனம்போலக்;கொதிப்பது - கொதிக்கும்
தன்மை வாய்ந்தது; (இப்போது) அக் கழலோர் வந்த போது- அந்த வீரக்
கழலை அணிந்த (பிரிந்து சென்ற) காதலர் மீண்டு வந்த போது;  அவர்
மனம் எனக் குளிர்ந்தது -
அந்த மகளிர் மனம் போலக் குளிர்ச்சி
அடைந்தது.

     பாலையின் வெம்மைக்குப் பரிந்த மகளிரின் உள்ளக் கொதிப்பையும்,
குளிர்ச்சிக்குச் கூடிய மகளிரின் உள்ளத் தண்மையையும் உவமைப்படுத்தினார்.
வெப்பக் கொடுமையால் முல்லைதிரிந்து  பாலையாகும் என்ற புலனெறி,
இங்கே பாலை திரிந்து முல்லையானதாக வடிவுகொண்டது.            46