2047. | ‘வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல், நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமஞ் சூல் காளமேகமும் நாகமும் தெரிகில - காணாய்! |
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! - வாளையும் வேலையும் ஒன்றுசேர்த்து ஒன்றனுள் ஒன்றைக் கலந்து வைத்தாற் போன்ற கண்களை உடைய மயில் போன்ற சாயலை உடையவளே!’ தாளின் - அடிப் பகுதியில்; ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் -ஏலக் கொடியும் மனம் உள்ள பச்சிலைக் கொடியும் பற்றிக் கிடக்கின்ற மலைப் பக்கத்தே; நீள மாலைய - நீண்ட இயல்பினை உடையவாய்; துயில்வன - உறங்குகின்றனவாகிய; நீர் உண்ட கமம் சூல்- நீரை உண்ட நிறைந்த கருப்பத்தை உடைய; காள மேகமும் -கரிய மேகமும்; நாகமும் - யானைகளும்; தெரிகில - வேற்றுமை உணரமுடியாது ஒன்றுபோலவே உள்ளன; காணாய் - இவற்றைப் பார்ப்பாயாக. மலைச்சாரலில் படிந்துள்ள நீருண்ட கரிய மேகங்களும், அங்கே உறங்கும் யானைகளும் வேற்றுமை தெரியா வண்ணம் கிடக்கின்ற வியப்பினைச் சீதைக்குக் காட்டிக்கூறினான் இராமன். அளாயின - கலந்த. ‘அளவளாவுதல்’ என்னும் வழக்கும் இப்பொருளினதே. ஏலம்,தமாலம் கொடி வகைகள். 2 |