2049.‘வடம் கொள் பூண் முலை மட மயிலே!
     மதக் கதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி
     அமைதொறும் தொடக்கி,
தடங்கள்தோறும் நின்று ஆடுவ,
     தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகைத் துகிற்கொடி
     நிகர்ப்பன - நோக்காய்!

     வடம்கொண் பூண் முலை மயிலே! - முத்துவடமாகக் கொள்ளப்
பெற்ற அணியை அணிந்ததனங்களையுடைய இளைய மயில் போன்றவளே!;

மதம்கத மா - மதம் பிடித்த சீற்றமுள்ள யானைகள்;  அடங்குபேழ்
வயிற்றுஅரவு உரி -
உள்ளே அடங்கிய பெரிய வயிற்றை உடைய
மலைப்பாம்புகள் உரித்த தோல்கள்;தடங்கள் தோறும்- மலையின் தாழ்
வரைகளில் எல்லாம் உள்ள; அமைதொறும் -மூங்கில்கள்தோறும்;
தொடக்கி - பிணித்து; நின்றுஆடுவ - அங்கேயேஇருந்து ஆடுகின்றன;
தண்டலை அயோத்தி - சோலை சூழ்ந்த அயோத்தி மாநகரத்தில்;
நுடங்கு - ஆடுகின்ற; மாளிகைத்துகில் கொடி நிகர்ப்பன -
மாளிகைகள் மேல்கட்டப்பெற்ற வெண்மையான நிறமுள்ள துணிக்
கொடிகளை ஒத்துள்ளன;  நோக்காய் -காண்பாயாக.

     யானைகளையும் விழுங்கும் வயிற்றை உடைய மலைப்பாம்புகள் உரித்த
தோல்கள் மிகப்பெரிதாக இருக்கும் ஆதலால், அவை துகில் கொடிகளை
ஒத்துள்ளன என்றாராம்- ‘குஞ்சரம் கோள்இழைக்கும் பாம்பு’ (திருக்கோவை
யார். 21.)                                                     4